வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (17:45 IST)

3 நிமிடங்கள் தாமதமாக வந்த பள்ளி மாணவர்கள்: ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை

மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வகுப்பிற்கு 3 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 3 நிமிடங்கள் தாமதமாக சென்ற மாணவர்களை இரும்பு கதவிற்கு வெளியே நாள் முழுவதும் வெயிலில் நிற்குமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த பள்ளியில் காலையில் பள்ளி துவங்கும் நேரத்திற்கு சரியாக வராவிட்டால் இரும்பு கேட் பூட்டப்படும். இதனால் வெகு தூரத்திலிருந்து ஆட்டோவில் வரும் பள்ளி மாணவர்கள் கேட்டிலேயே ஒரு நாள் முழுவதும் நிற்க நேரிடும். இந்த தண்டனை இப்பள்ளியில் தொடர்ந்து தரப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், 3 நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே வெயிலில் நிற்க வைக்கும் பள்ளி நிர்வாகம், அந்த பள்ளியின் பேருந்து 15 நிமிடங்கள் தாமதாக வந்தாலும் அனுமதிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் பள்ளி பேருந்தில் தான் மாணவர்கள் வரவேண்டும், கல்வி கட்டணத்தையும் சேர்த்து அதற்கான தொகையையும் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளி நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனவும் சிலர் கூறுகின்றனர்.

பள்ளி வாகனம் 3 மணி நேரம் கழித்து வந்தாலும் பள்ளியின் இரும்பு கேட் திறக்கும். அவ்வாறு பள்ளி வாகனத்தில் தாமதமாக வரும் மாணவர்களை எந்த கேள்வியும் பள்ளி நிர்வாகம் கேட்காது எனவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மேலும் ஒரு மாணவர் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை எடுத்தால், மீண்டும் புதிதாக அட்மிஷன் போடவேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் கண்டிப்போடு கூறுகிறார்கள் எனவும் பெற்றொர்கள் கூறுகின்றனர்.

பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கிறார்களா? அரசு வகுத்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகம் கடைபிடிக்கிறதா? மாணவர்களை ஒரு நாள் முழுக்க வெளியில் நிற்கவைப்பது அரசுக்கு தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பார்களா? என இந்த பள்ளியின் மீதும் தமிழக அரசின் மீது பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர் பெற்றோர்கள்.