வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (14:43 IST)

தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முன்பதிவு விறுவிறுப்பு

தீபாவளியை முன்னிட்டு, கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கோயம்பேடு சிறப்பு கணினி முன்பதிவு மையங்களில் நேற்று தொடங்கியது. ஏராளமானோர் வரிசையில் நின்று முன்பதிவு செய்தனர்.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 9 ஆயிரத்து  88 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்பட  உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க  தமிழக அரசு முடிவு செய்தது.  இதன்படி,  அனைத்து மாவட்ட  தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு கோயம்பேடு  புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 17 ஆம் தேதி 501 சிறப்பு  பேருந்துகள், 18 ஆம் தேதி 501, 19 ஆம் தேதி 699, 20 ஆம் தேதி 1,400, 21 ஆம் தேதி  1,652 என 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மொத்தம் 4 ஆயிரத்து 753  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து  மாநிலத்தின் மற்ற இடங்களில் இருந்து 17 ஆம் தேதி 499 சிறப்பு  பேருந்துகள், 18 ஆம் தேதி 601, 19 ஆம் தேதி 700, 20 ஆம் தேதி 1,234, 21 ஆம் தேதி  1,301  என 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 4,335 சிறப்புப் பேருந்துகள்  இயக்கப்படுவதா அறிவிக்கப்பட்டது.
 
மொத்தத்தில், 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 9 ஆயிரத்து 88 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும். இதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த  பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் இதே  அளவிலான பேருந்துகள் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை  இயக்கப்படும். தவிர, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின்  சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டுகளில்  மேற்கொள்ளப்பட்டதுபோல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல்  செல்லும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர்  www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து  கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி முன்பதிவு செய்யும்  வகையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு  மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 
தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்  வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து கோயம்பேடு புறநகர் பேருந்து  நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலக  தொலைபேசி எண் 24794709க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க  ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளிக்காக கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கோயம்பேடு சிறப்பு கணினி முன்பதிவு மையங்களில் நேற்று தொடங்கியது. ஏராளமானோர் வரிசையில் நின்று முன்பதிவு செய்தனர்.