வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (18:55 IST)

ஆசிரியை திட்டியதால் 7 மாணவிகள் எலி மருந்து குடித்து தற்கொலை முயற்சி

ஆசிரியைகள் திட்டியதை அடுத்து, ஆதிதிராவிடர் நல விடுதி மாணவிகள் 7 பேர் எலி மருந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி உள்ளது. இந்த விடுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று நன்றாக படிக்காத காரணத்தினால் ஆசிரியைகள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விடுதியில் தங்கியிருந்த 7 மாணவிகள் எலி மருந்து வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, இதுகுறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், மயங்கி விழுந்த மாணவிகளை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாணவிகள் அனைவரும் தேனி பேரூராட்சிக்கு உட்பட்ட மகாராஜா மெட்டு என்ற மலைக் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அலறியடித்துக்கொண்டு வந்தனர். இச்சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் பள்ளி ஆசிரியர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

7 மாணவிகள் மொத்தமாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் தற்கொலை முயற்சி குறித்து, ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.