வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் இன்று (4-10-2023) மதியம் வெடிகளை பார்சல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்த திரு.மாணிக்கம், மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.மதன், திரு.மகேஷ் மற்றும் திரு.ராகவன் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.