வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (11:54 IST)

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் போலி டாக்டர்கள்: அதிர்ச்சித் தகவல்

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 
இந்திய மருத்துவ சங்கத்தின் 280 ஆவது கவுன்சில் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
 
இது குறித்து பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இந்திய மருத்துவ சங்கம் கடந்த 1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்திய அளவில் தமிழகம் அதிக உறுப்பினர்களை கொண்ட கிளையில் 2 ஆவது இடத்தை பிடித்து உள்ளது.
 
தமிழகத்தில் மட்டும் இச்சங்கத்தில் 30 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். 3 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
இதில் மருத்துவர்களுக்கு உள்ள பிரச்சினை மற்றும் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பது பற்றி ஆராய்ந்து, தீர்வு காணப்பட்டு வருகிறது.
 
இதில் தமிழகம் முழுவதும் உள்ள 149 கிளைகளில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்று உள்ளனர். தற்போது அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மருத்துவதுறை மீது அதிருப்தியில் உள்ளனர்.
 
இதற்கு மருத்துவதுறையில் எங்காவது நடைபெறும் விரும்பதகாத நிகழ்வு காரணமாக உள்ளது. நாங்கள் செய்யும் நல்ல செயல்கள் வெளியே வருவது இல்லை.
 
சுகாதார துறையில் இன்சூரன்சின் பங்கு பெருகி வருகிறது. அதற்கு இந்திய மருத்துவ சங்கம் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 650 மருத்துவமனைகள் இன்சூரன்சு திட்டத்தில் இணைக் கப்பட்டு உள்ளன.
 
பாரத பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் இன்சூரன்சு திட்டம் கிடைக்கும் வகையில் திட்டம் தயார் செய்து வருகிறோம் என அறிவித்து உள்ளார்.
 
அதற்கான தொகையை நிர்ணயம் செய்யும் போது, இந்திய மருத்துவ சங்கத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும். மருத்துவமனை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை விரைவில் கொண்டு வரவேண்டும்.
 
இதன் மூலம் மருத்துவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை நிருபிக்க முடியும். எனவே வருகிற மழைக்கால சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான மாசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
 
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் மாவட்டத்திற்கு ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை உள்ளனர்.
 
இவர்கள் வாங்கும் கட்டணம் குறைவாக இருக்கலாம். ஆனால் விளைவு ஆபத்தானது. எனவே, அரசு இவர்களை ஒழிக்க வேண்டும். மருத்துவமனை ஒழுங்குபடுத்தும் சட்டம் போலி மருத்துவர்களை ஒழிக்க உதவும் என நம்புகிறோம்.“ இவ்வாறு அவர் கூறினார்.