1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 3 மே 2016 (08:49 IST)

காப்பகத்தில் தங்கியிருந்த 3 இளம்பெண்கள் மாயம்! - கடத்தலா?

திருவண்ணாமலை காப்பகத்தில் தங்கியிருந்த 3 மாணவிகள் திடீரென காணாமல் போனதையடுத்து, அவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 
திருவண்ணாமலை-பெரும்பாக்கம் சாலையில் தனியார் பெண் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 6 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 50 க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் கடந்த 30ம் தேதி மதியம் பள்ளிக்கு சென்ற மாணவிகள் காப்பகத்திற்கு சாப்பிட வந்துள்ளனர். அப்போது 14, 15, 17 வயதுள்ள 3 மாணவிகள் மட்டும் சாப்பிட வரவில்லையாம்.
 
மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அங்கும் அவர்கள் இல்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த காப்பக ஊழியர்கள், காப்பக இல்ல பொறுப்பாளர் மேனகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து மாயமான மாணவிகளை அக்கம் பக்கம் தேடினர். ஆனால் மாணவிகள் கிடைக்கவில்லை. இது குறித்து மேனகா நேற்று திருவண்ணாமலை தாலுகா காவல்துறையில் புகார் செய்தார்.
 
அதன் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாயமான மாணவிகளை யாரேனும் கடத்தி சென்றார்களா? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.