வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (10:49 IST)

3 மாணவிகள் மரண வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

3 மாணவிகள் மரண வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை தற்போது எந்தநிலையில் உள்ளது என்று பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ஏழுமலை தாக்கல் செய்த மனு, செவ்வாயன்று நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, அரசுத் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், மனுதாரர் ஏழுமலை சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சரண்யாவின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய தேவையில்லை என்று கூறி, ஏழுமலையின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
 
கிணற்றில் பிணமாக மிதந்த 3 மாணவிகளில், மோனிஷா உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய அவரது தந்தை தமிழரசன் மனு செய்தார். அந்தமனுவை ஏற்றுக் கொண்டு, மறு பிரேதப் பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதைப் பார்த்து, சரண்யாவின் தந்தை ஏழுமலையும் அதே கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்துள்ளார். சரண்யாவின் உடல் கடந்த ஜனவரி 24ஆம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதே நாளில் அடக்கமும் செய்யப்பட்டு விட்டது. அதன் பின்னர், கடந்த 3ஆம் தேதி மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால், அடக்கம் செய்யப்பட்டுள்ள சரண்யாவின் உடல் தற்போது அழுகியிருக்கும். ஏற்கெனவே, பிரேதப் பரிசோதனையின்போது குடல், நுரையீரல் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகளை அரசு மருத்துவர்கள் சேகரித்து, தடய ஆய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். எனவே, மறு பிரேதப் பரிசோதனை அவசியம் இல்லை.
 
ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘புதைக்கப்பட்டு 15 நாட்கள் ஆனாலும் பிணத்தில் எந்தமாற்றமும் ஏற்படாது; எனவே, மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டார். ஆனால், உயர்நீதிமன்றம் மருத்துவத் துறையில் நிபுணத்தும் பெற்றிருக்கவில்லை.
 
எனவே, சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது. மேலும், இது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி ஆர்.மாலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
 
அதேநேரத்தில், மோனிஷாவின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்தது உள்பட இந்த வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.