பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.. தந்தை, தாத்தா மீது வழக்குப்பதிவு..!
கோவை பீளமேடு அருகே பிளஸ் 2 மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு அருகே சவுரிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜின் 17 வயது மகன், நேற்று முன்தினம் அதிகாலை காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்த நிலையில் சிறுவனின் தந்தை மற்றும் கார் உரிமையாளரான சிறுவனின் தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி மேற்குவங்கத்தைச் சேர்ந்த 23வயது அக்ஷய் வேரா என்றும், அவிநாசி சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
18 வயதுக்கு குறைவானவர்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கி அதனால் விபத்து ஏற்பட்டால் சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும் என ஏற்கனவே அரசு எச்சரிக்கை விடுத்தும் பல பெற்றோர்கள் இன்னும் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிப்பது பொறுப்பில்லாத தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran