மாசால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27% இந்தியர்கள் - அன்புமணி!
உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27% இந்தியர்கள் என அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு..
உலகம் முழுவதும் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமீப காலங்களில் அதிகரித்துள்ள வாகனங்களின் பயன்பாடு காரணமாக ஏற்படும் புகை, தொழிற்சாலை புகை என நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
காற்று மாசுபாடால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் இதழ் சார்பில் நடத்தப்பட்ட காற்று மாசு குறித்த ஆய்வில் உலக அளவில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 55 சதவீதம் உயர்ந்துள்ளது. வங்கதேசம் மற்றும் எத்தியோப்பிய நாடுகளில் காற்று மாசால் ஒரு ஆண்டில் மட்டும் 1,42,883 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் நாடுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. அதே சமயம் புருனே, கத்தார் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை குறைந்த காற்று மாசு இறப்பு விகிதங்களை கொண்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 2019 ஆம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கிறது.
உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27% இந்தியர்கள் என்பதிலிருந்தே இந்தியா எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை உணரலாம். தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்களை இழப்பதில் தவறில்லை என்ற எண்ணமே இந்த நிலைக்கு காரணம் ஆகும். இது மிகவும் ஆபத்தானது.பொருளாதாரம் ஈட்டுவதற்காகத்தான் காற்றையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறோம்.
ஆனால், மாசுக்களால் 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பின் மதிப்பு ரூ. 2.73 லட்சம் கோடி (1% of India's GDP) ஆகும். ஆக எதையும் பெறாமலேயே நிறைய இழக்கிறோம்.காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. எனவே, மக்களைக் காப்பாற்றுவதற்காக காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.