திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (09:29 IST)

உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை! - திருச்சி மலைக்கோட்டையில் சிறப்பு ஏற்பாடு!

Tirchy Malaikottai

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

 

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் நாடு முழுவதும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை வாங்கி வீட்டில், தெரு முக்கில் வைப்பது, பந்தல் அமைப்பது என சதுர்த்தியை கொண்டாட கோலாகலமாக தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் நாளை சிறப்பு பூஜை, தரிசனத்திற்காக மக்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

 

தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டையில் உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ அளவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை செய்து படையல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மலைக்கோட்டையில் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சிப் பிள்ளையாரும், நடுவே தாயுமானஸ்வாமி, மட்டுவார் குழலம்மை சகிதம் எழுந்தருளியுள்ளனர். தமிழகத்தில் விநாயகர் நான்கு கைகளுடன் நின்றபடி அருள்பாலிக்கும் கோவில் மாணிக்க விநாயகர் கோவில் ஆகும்.

 

150 கிலோ அளவில் பிரம்மாண்டமாக செய்யப்படும் இந்த கொழுக்கட்டை தாயுமானஸ்வாமி மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. தேங்காய், பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய், பருப்பு, நெய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை வேகவைக்கவே 24 மணி நேரம் ஆகும் என்பதால் இன்று முதலே கொழுக்கட்டை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.