என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது - ஜோதிமணி

Last Updated: திங்கள், 31 மார்ச் 2014 (15:16 IST)
என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது. வசதி படைத்த மாவட்ட தலைவரையோ, கரூர் நகர் மன்ற உறுப்பினர் ஸ்டீபனையோ நிறுத்தியிருந்தால் ஓரளவு ஓட்டு கிடைக்கும் என்று கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கரூர் தாந்தோணி மலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

கூட்டம் தொடங்கியதும் மகிளா காங்கிரஸ் நிர்வாகி உமா மகேஸ்வரி பேசினார். அப்போது, ‘இந்த காலத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கே கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. சாதாரண டெக்ஸ்டைல் வேலைக்கு செல்லும் பெண்களை கூட ரூ.300 கொடுத்துதான் அழைத்து வர வேண்டும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து வேட்பாளர் ஜோதிமணி பேசும்போது ‘என்னிடம் ரூ.2,500 தான் இருக்கிறது எப்படி தேர்தலை சந்திப்பது. வசதி படைத்த மாவட்ட தலைவரையோ, கரூர் நகர் மன்ற உறுப்பினர் ஸ்டீபனையோ நிறுத்தியிருந்தால் ஓரளவு ஓட்டு கிடைக்கும்’ என்றார்.

இதை கேட்ட நகர தலைவர் சுப்பன் ஜோதிமணியிடம் இருந்து மைக்கை பறித்தார். உடனே ஜோதிமணி ‘இதற்கெல்லாம் காரணம் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தான், மேலிடத்தில் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார்.
இதையடுத்து சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீசுக்கும், ஜோதிமணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தொண்டர்களுக்கு இடையே தள்ள முள்ளு ஏற்பட்டது. தொண்டர் ஒருவருக்கு அடியும் விழுந்தது. இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேகா பலச்சந்திரனின் சட்டை கிழிந்தது.

ரகளையில் ஈடுபட்ட தொண்டர்களை மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் சமாதனப்படுத்திய பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது. வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே வேட்பாளர் விரக்தியுடன் பேசியதும், தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதும் கரூர் காங்கிரசார் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :