1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. ரஞ்சனி நாராயணன்
Last Updated : புதன், 17 செப்டம்பர் 2014 (13:47 IST)

2 மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பறந்த இதயம்!

‘நிஜ வாழ்க்கையில் நடப்பதைத்தான் நாங்கள் எங்கள் படங்களில் சொல்கிறோம்’ என்பார்கள் திரைப்பட இயக்குநர்கள். முதல் முறையாக திரைப்படத்தில் காட்டிய விஷயம் ஒன்று நிஜமாக நிகழ்ந்திருக்கிறது. 
 
‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் காட்டியது போல உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்று பரபரப்பாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. உறுப்பு தானமாகப் பெறப்பட்டது பெங்களூரில். அதை இன்னொருவருக்குப் பொருத்தியது சென்னையில். பெங்களூரில் மூளைச் சாவு ஏற்பட்ட ஒரு பெண்மணியின் இதயம், சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இன்னொருவருக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்கள், போக்குவரத்து காவல் துறையினர், மிக மிகத் துல்லியமாக திட்டம் தீட்டி, பெங்களூருவிலிருந்து இதயம் ஒன்றைச் சென்னைக்கு கொண்டு வந்து இதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 2ஆம் தேதி விபத்து ஏற்பட்டு, இதய மாற்று சிகிச்சை 3ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.
 
‘உடலிலிருந்து வெளியில் எடுத்த இதயத்தை நான்கு மணிநேரம் வரை குளிர்பதன சேமிப்பில் வைக்க முடியும். ஆனால் நாங்கள் எங்களுக்கு 3 மணிநேரக் கெடுவை விதித்துக்கொண்டோம். கடைசியில் 2 மணி நேரத்தில் இந்தச் சாதனையைச் செய்துவிட்டோம்’ என்கிறார் ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் ஃபெசிலிட்டி இயக்குநர் ஹரீஷ் மணியன்.
 
இதயத்தைக் கொடுத்தவர் யார்?
 
மூளைச் சாவிற்கு உள்ளானவர் ஒரு 32 வயது இல்லத்தரசி. இரண்டு குழந்தைகளின் தாய். இவரது கணவர் தச்சு வேலை செய்பவர். இந்தப் பெண்மணி இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்லும்போது வாகனத்தின் டயர் வெடித்து வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். விபத்து நடந்த இடம் ஹோசூர். மிகவும் ஆபத்தான நிலையில் பெங்களூரு பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த போதும் பலனளிக்காமல் மூளைச் சாவிற்கு உள்ளானர். இது நடந்தது, 2014 செப்டம்பர் 2ஆம் தேதி செவ்வாய் அன்று. அந்தப் பெண்மணியின் குடும்பத்தாருடன் மருத்துவர்கள் உறுப்பு தானம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். இவரது இதயம், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றைத் தானமாகப் பெற சம்மதம் வாங்கப்பட்டது. 
 
பெங்களூரு பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனையில் இது போன்ற உறுப்பு தானத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் கொடுக்கப்பட்டன. பெங்களூருவில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில்  இன்னொரு நோயாளிக்கு இரண்டாவது சிறுநீரகம் அளிக்கப்பட்டது. ஆனால் பெங்களூருவில் இதயத்திற்காகக் காத்திருக்கும் நோயாளிகள் யாருக்கும் இந்தப் பெண்மணியின் இதயம் பொருந்தவில்லை. அதே சமயம் சென்னையில் உள்ள நோயாளி ஒருவருக்கு இந்த இதயம் பொருந்துவது தெரிய வந்தது..
 
இந்த மாதிரியான உறுப்பு தானங்களைப் பொறுப்பு எடுத்து நடத்தித் தரும் கர்நாடகத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் குழு, இரு மாநில மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டியதைச் செயல்படுத்த ஆரம்பித்தது. மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து இதயத்தை எப்படி பாதுகாப்பாகச் சென்னைக்கு எடுத்துச் செல்வது என்று ஆலோசனையை ஆரம்பித்தனர். 

ஆம்புலன்ஸ் வண்டியின் பாதையில்:
 
முதல் வேலையாக மூளைச் சாவு ஏற்பட்ட பெண்மணியிடமிருந்து எடுக்கப்பட்ட இதயத்தைச் சென்னைக்குக் கொண்டு போக வேண்டும். பெங்களூரு பிஜிஸ் குளோபல் மருத்துவமனை இருக்கும் இராஜராஜேஸ்வரி நகரிலிருந்து பெங்களூரு கெம்பேகௌட விமான நிலையம் 55 கி.மீ. எவ்வளவு சீக்கிரம் இந்தத் தூரத்தைக் கடக்க முடியும்? பொதுவாக ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் இந்த முறை இந்தத் தூரத்தை 45 நிமிடத்தில் கடந்தது ஆம்புலன்ஸ் வாகனம். எப்படி?
 
டெபுடி கமிஷனர் போக்குவரத்து (வடக்கு) எஸ். கிரீஷ் கூறுகிறார். 
 
“வழக்கம்போல காலையில் என் வேலைகளைத் தொடங்கினேன். ஆனால் அது ஒரு வித்தியாசமான நாளாக அமைய போகிறது என்று பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனையிலிருந்து வந்த தொலைபேசிச் செய்தி கூறியது. செய்தி இதுதான்: ‘மருத்துவ மனையிலிருந்து இதயம் ஒன்று மின்னல் வேகத்தில் சென்னையை அடைய வேண்டும். இதற்கு உங்கள் உதவி தேவை.  ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவ மனையிலிருந்து மதியம் 1.30 மணிக்குக் கிளம்ப உள்ளது’ 
 
‘தடைகள் – இல்லாத அதே சமயம் ஆம்புலன்ஸ் வண்டி அதிவேகமாகச் செல்லக்கூடிய வழியை, பாதையைத் தேர்ந்தெடுக்க காலை 8.30 மணிக்குப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் 50 பேர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். குறுகலான சாலைகளைத் தவிர்த்தோம். ஒரு டெபுடி கமிஷனர், ஒரு உதவி கமிஷனருடன் இணைந்து ஆம்புலன்ஸ் வண்டியின் ஓட்டத்தை எங்கள் அலுவலகத்திலிருந்தே கவனிக்க ஏற்பாடு செய்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதையில் மொத்தம் 30 சாலைச் சந்திப்புகள். ஆன்புலன்ஸ் வண்டி ஒரு இடத்தைக் கடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே போக்குவரத்தைத் தடையில்லாமல் விலக்க, சாலைச் சந்திப்புகளில் சுமார் 15 அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர். ஒவ்வொரு சந்திப்பிலும் 25க்கு மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் வழியைக் கண்காணித்தும் தொடர்ந்து அதன் ஓட்டத்தைக் குழுவில் இருப்பவர்களுக்கு அறிவித்துக் கொண்டும் இருந்தனர்’.
மேலும்
‘மதியம் ஒன்றரை மணிக்கு ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவ மனையை விட்டுக் கிளம்பியதும் எங்கள் வயர்லஸ் கருவிகள் உயிர் பெற்றன. ஆம்புலன்ஸ் வண்டிக்கு முன்னும் பின்னும் எங்கள் வண்டிகள் வந்து கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் வண்டியில் இதயம் வைக்கப்பட்டிருந்த நீலப் பெட்டியுடன் நான்கு அறுவை சிகிச்சை மருத்துவர்களும் இருந்தனர்.
 
ஆம்புலன்ஸ் வண்டி விமான நிலையத்தை 47 நிமிடத்தில் அடைந்தது. அங்கிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இதயம் வைக்கப்பட்டிருந்த நீலப் பெட்டி ஏற்றப்பட்டு, சென்னையை அடைந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஃபோர்டிஸ் மருத்துவ மனையை 7 நிமிடத்தில் அடைந்திருக்கிறது ஆம்புலன்ஸ் வாகனம். பெங்களூருவில் செய்தது போலவே இங்கும் போக்குவரத்துத் துறையினர் பாராட்டத்தக்க வகையில் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள்.
 
முதல்முறையாக:
 
 
இரு மாநிலங்களுக்கு இடையே உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று சிகிச்சை என்பது இதுவே முதல் முறை. அதுவும் இப்படி பெங்களூருவில் நடப்பதும் இதுவே முதல் முறை. நோயாளிகள் ஒரு மருத்துவ மனையிலிருந்து இன்னொரு மருத்துவ மனைக்கு மாற்றப்படுவது உண்டு. ஆனால் முதல் முறையாக இதயத்தைத் தாங்கி வரும் ஆம்புலஸ் வாகனம் செல்வதற்குச் சிக்னல்கள் இல்லாப் பாதையைப் போக்குவரத்துத் துறையினர் வடிவமைத்தார்கள். ஆம்புலன்ஸ் வரும் நேரத்தில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு எதுவும் இருக்கவில்லை.
 
பொதுவான சில விஷயங்கள்
 
மூளைச் சாவு என்றால் என்ன?
 
மூளையில் பலமான அடிபட்டோ  அல்லது மூளையின் உள்ளே இரத்தப் போக்கோ ஏற்பட்டு, மூளை செயல் இழந்து போகும் நிலையே மூளைச் சாவு. சாலை விபத்தின் போது அல்லது பக்கவாதம் ஏற்பட்டு மூளையின் உள்ளே இரத்தப் போக்கு ஏற்படும் போது இதைப் போல ஏற்படும். பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே மூளைச் சாவு நிர்ணயிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் ஆதரவுக் கருவிகள் மூலம் உடலின் முக்கியமான உறுப்புகள் இயங்க வைக்கப்படும்.
 
உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?
 
 
வெளியே எடுக்கப்பட்ட இதயம் வெப்ப நிலையைச் சமமாக வைக்கும் பெட்டியினுள் உறுப்பு பாதுகாக்கும் திரவத்தில் வைக்கப்படுகிறது. பெட்டியினுள் சுற்றிலும் நிறைய பனிக்கட்டிகள் வைக்கப்பட்டு, வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் இதயத்தை 6 மணிநேரம் பாதுகாக்கலாம். இந்தப் பெட்டி மிக மிகப் பத்திரமாகக் கையாளப்படுகிறது.
 
தானம் செய்பவரின் குடும்பத்தைச் சமாதானம் செய்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். அதுவும் மூளைச் சாவு என்பதைப் புரிய வைப்பது மிக மிகச் சிக்கலானது. அதுவும் இந்த முறை இரண்டு குழந்தைகளின் தாய், வயதில் சிறியவர் என எல்லாவற்றையும் மனத்தில் கொண்டு அந்தக் குடும்பத்தை உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டிவந்தது. 
 
 
2014ஆம் வருடம் கர்நாடக மண்டல ஒருங்கிணைப்புக் குழுவினரால் செய்யப்படும் 23ஆவது உறுப்பு தானம் இது. 
 
இந்த நிகழ்வு ஆரம்பித்து, நடந்து முடிய மொத்தம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. இந்த நேரம் முழுவதும் தானம் செய்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயம் விடாமல் துடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தானம் கொடுத்தவர் அமைதியாக உறங்கும் வேளையில் இந்த இதயத்தைப் பெற்றவருக்குப் புதிய வாழ்க்கைக் கதவு திறந்திருக்கிறது. 
 
உறுப்பு தானத்திற்காகக் காத்திருப்பவர்கள், அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. இந்த மாதிரி நிகழ்வுகளை ஊடகங்களின் மூலம் வெளிக்கொண்டு வருவது பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வைக் கொண்டு வரும் என்பது உண்மை.