வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. பெருமாள் மணிகண்டன்
Last Updated : புதன், 29 அக்டோபர் 2014 (13:47 IST)

இணைய வணிகத்தில் பெருகும் அந்நிய முதலீடுகள்

மக்கள் தொகை காரணமாக இந்தியச் சந்தை மீது பெருவணிக நிறுவனங்கள், எப்போதும் கவனம் வைத்திருக்கும். உலக மயமாக்கலுக்குப் பிறகு அமெரிக்கப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய பாரதப் பிரதமரும், இந்தியாவின் கதவுகளைச் சர்வதேசச் சந்தைக்குத் திறந்து விட்டவருமான பி.வி. நரசிம்மராவ், 'வளர்ந்து வரும் இந்தியச் சந்தையைப் புறக்கணிக்கும் நிலையில் உலகின் வளர்ந்த எந்த நாடும் இல்லை' எனக் குறிப்பிட்டார். 
 
இந்தியச் சந்தைகளின் வரலாறு நீண்டது. சில குறிப்பிட்ட வணிகத்தை நீண்ட காலமாகச் சில குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்து வருவது குறித்த ஆய்வுகள், பொருளாதார எல்லைகளைத் தாண்டி, சமூகவியல் தளத்திற்குள் நீளும் தன்மை கொண்டது. 
 
இந்தியச் சந்தைகளில் அந்நிய நேரடி முதலீடு குறித்தும், வால்மார்ட் (Walmart) போன்ற பெரிய நிறுவனங்களின் வருகை குறித்தும் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. நேரடி விற்பனைச் சந்தை குறித்த விவாதங்கள், பாராளுமன்றம் வரை நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் ‘ஆன்லைன்’ வர்த்தகம் எனப்படும் இணைய வர்த்தகம், தனது வாடிக்கையாளர் பரப்பை விரிவாக்கத் தொடங்கியது. 
 
இணையப் பயன்பாட்டில் இந்தியா உலகில் 142ஆவது இடத்தில் உள்ளது. ஆனாலும் இந்தியாவின் இணையச் சந்தை பெரிதென கொள்ளப்படுவதற்குக் காரணம் அதிகமான மக்கள் தொகையே! இந்தையாவின் இணைய வணிகத்தில் ஸ்மார்ட் போன்களின் (Smart phone) பங்கு பெரியது. நடப்பு ஆண்டில் மட்டும் இன்னும் 225 மில்லியன் செல்போன்கள் விற்பனையாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 
 
இணையம் மூலம் பொருட்களை வாங்குகிற விதத்தில் ஆண்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது, இணைய வணிகத்திற்கான பரப்பை அதிகரிக்கச் செய்யும் காரணியாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் மூலம் இணைய வணிகத்தில் பொருட்களை வாங்கும் பெண்களின் எண்ணிக்கை, ஆண்களை விட அதிகம் இருக்கும் என்ற கணிப்பு இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

 
அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) இரண்டும் தற்போதைய இந்திய இணையச் சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகும். அமேசான், அமெரிக்காவின் பெரிய இணைய வணிக நிறுவனமாகும். இந்தியச் சந்தைக்குள் அமேசான் வந்த போது, அதன் போட்டியை இந்திய நிறுவனங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற வாதம் எழுந்தது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), இந்தியச் சந்தையில் தனது நிறுவனத்தை வலுவாக்க இரண்டு பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார். 
 
முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட், டைகர் குளோபல் (Tiger Global) மற்றும் தென் ஆப்பிரிக்க நிறுவனமான நேஸ்பர்ஸ் (Naspers) மூலம் சுமார் 1.2 பில்லியனைத் தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்னர் ஒரே நாளில் சுமார் 600 கோடி வரை இந்த நிறுவனம் வணிகம் செய்தது குறிப்பிடத் தகுந்தது. 

மேலும்
சீனத்தின் அலிபாபா (Alibaba) என்ற நிறுவனம் தனது வளர்ச்சியால் உலகில் பலரையும் வியக்க வைத்துள்ளது. பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரால் தொடங்கப்பட்ட அலிபாபாவில் 14 ஆண்டுகளுக்கு முன் 20 மில்லியன் முதலீடு செய்த சாஃப்ட் பேங்க் (Soft bank), இன்று அதன் 37% பங்குகளுக்கு உரிமையாளராக உள்ளது. நேற்றைய தினத்தின் படி இந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் 80 பில்லியன்.  
 
ஸ்நாப்டீல் (Snapdeal) என்ற இந்திய இணைய வணிக நிறுவனத்தில் சாஃப்ட் பேங்க் (Soft bank), 3800 கோடிகள் முதலீடு செய்துள்ளது. வளர்ந்து வரும் இணைய வணிக நிறுவனம் ஒன்றில் செய்யப்பட்ட பெரிய முதலீடாக இது கணிக்கப்படுகிறது. 
 
கடந்த முறை ஜப்பான் சென்ற இந்திய பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, இந்தியா வந்த சாஃப்ட் பேங்க்கின் (Softbank) மசாயோஷி சன் (Masayoshi Son) முதலீடு பற்றி அறிவித்தார். 
 
இந்த முதலீடு, இணைய வணிகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் எனக் கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். 


 
நேரடி வணிகத்தில் இணைய வணிகம் மெதுவாகத் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது. இணையத்தில் காணக் கிடைக்கிற விலைக்குக்  கடைக்காரரிடம் பொருட்களுக்குப் பேரம் பேசுகிற நிலை அதிகரித்து வருவதாக வணிகர்கள் கூறுகின்றனர். சில நிறுவனங்கள் நேரடியாக இணையச் சந்தைகள் மூலம் மட்டுமே பொருட்களை விற்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. 
 
சமீபத்தில் மோட்டோரோலா (Motorola) என்ற நிறுவனம் தனது செல்போன்களை 'பிளிப்கார்ட்' மூலம் மட்டுமே விற்பனை செய்தது கவனிக்கப்பட வேண்டியது. இணையம் பயன்படுத்தத் தொடங்காத வாடிக்கையாளர்களை நிராகரித்துச் செய்யும் இந்த வணிகமே தங்களுக்குப் போதுமானதாக உள்ளதாக சில நிறுவனங்கள் கருதுகின்றன. 
 
இணைய வணிகம் இன்னமும் முறைப்படுத்தபடாமல் இருக்கிறது. வங்கிக் கணக்குகளின் மூலம் செலுத்தப்படுகிற பணம் தவிர COD (Cash On Delivery) எனப்படும் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பணம் தரும் முறையையும் இணையச் சந்தை நிறுவனங்கள் கொண்டுள்ளன. பொருட்களை விநியோகம் செய்கிற ஊழியர்கள் சார்ந்து, எவ்வித சட்ட திட்டங்களும் இணைய நிறுவனங்களுக்கு வகுக்கப்படவில்லை. 
 
வரிகள் சார்ந்தும், ஊழியர் நலன் குறித்தும், பொருட்களின் தரம் குறித்தும் இன்னமும் தெளிவான சட்டங்கள் தேவைப்படும் நிலையில் இணைய வணிகம் அந்நிய நிறுவனங்களின் வருகையாலும், பெரிய அளவில் வரும் அந்நிய முதலீடுகளாலும் இந்திய நேரடி வணிகர்களுக்கு சவாலாக உருவாவதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.