நவராத்திரி பத்து நாட்களும் பத்து வகையான பிரசாதங்கள் படைப்பது ஏன்...?
நவராத்திரி பத்து நாட்களும், கொலு வைத்து, அக்கம் பக்கத்தார் அனைவரையும் அழைத்து உபசரித்து, வெற்றிலைப் பாக்கு, பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம்.
நவராத்திரி என்றாலே, நம் நினைவுக்கு வருவது சுண்டல்தான். நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது.
தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ "மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி "சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது.
நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.
சிலர், நவராத்திரி மாதத்தில் பருவநிலை சற்று மாறுவதால், உடல் நிலையும் மந்தமாக இருக்கும். அதை சீராக்கவே புரோட்டீன் மற்றும் சத்து நிறைந்த முழு தானியங்களை உபயோகித்து சுண்டல் செய்து அனைவருக்கும் வழங்குவதாகக் கூறுவர்.
நவராத்திரியின் பொழுது, நவகிரகங்களை சாந்தப்படுத்த, நவதானியங்களை உபயோகித்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியங்களில் உணவு சமைத்து (கோதுமை, அரிசி, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, மொச்சைக்கொட்டை, எள்ளு, கொள்ளு, உளுத்தம் பருப்பு) படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவர்.