நவராத்திரி விரதம் மேற்கொள்ளவேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன...?

Sasikala|
நவராத்திரி விரதம், கும்ப பூஜையோடு தான் ஆரம்பமாகிறது. இச்சா, கிரியா, ஞான சக்திகளை அருளும் பூமகள், மாமகள், நாமகள் மூவரையும் ஒரே அம்சமாக, கலசம் ஒன்றில் எழுந்தருள வேண்டிடுவதுதான் இந்த பூஜை. 

நவராத்திரி தொடங்கும் நாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, கொலு  வைக்கப்போகிற இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜையை தொடங்குவது பாரம்பரியமான வழக்கம். 
 
மணைப் பலகை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை நன்கு  கழுவி சுத்தம் செய்து, அதில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் நுனி வாழையிலை ஒன்றை வைத்து, கொஞ்சம் நெல் அல்லது அரிசியைப் (பச்சரிசி) பரப்பவும். அதன் மேல் தூய நீர் நிரப்பிய வெள்ளி அல்லது செம்பு கலசத்தை வையுங்கள். .சிறிதளவு பச்சை கற்பூரம், சந்தனம், ஓரிரு பூவிதழ்களை அந்த நீரில் இடவும். புதிய சில்லறைக் காசுகள் சிலவற்றையும் அதனுள் போடவும். 
 
செம்பின் வாய்ப் பகுதியில் புதிய மாவிலைகளை செருகி, மஞ்சள் பூசப்பட்ட ஒரு தேங்காயை அதன் மீது வையுங்கள். கலசத்தின் கழுத்தை சிவப்பு நிறத் துணியால் சுற்றி வையுங்கள். 
 
பூஜையறையில் விளக்கேற்றியபின், கலசத்தின் முன்பும் ஒரு விளக்கினை ஏற்றி வைக்கலாம். அவரவர் வழக்கப்படி குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றலாம். 
 
கலசத்தின் முன் ஒரு வெற்றிலையை வைத்து, அதன்மீது மஞ்சள் பொடியினால் பிள்ளையார் பிடித்து வையுங்கள். இந்தப் பிள்ளையாருக்கு குங்குமப் பொட்டிட்டு பூ  சாத்துங்கள். பின்னர் கலசத்திற்கும் பொட்டு வைத்து, பூ சாத்தி, தூபம் ஏற்றி வையுங்கள். 
 
முதலில் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களை கலசத்தில் எழுந்தருளும்படி மனதால் வேண்டிக் கொள்ளுங்கள்.  பிறகு அவர்களுக்கு தூப, தீபம் காட்டி வணங்கிக் கொள்ளுங்கள். அடுத்து, காய்ச்சி சர்க்கரை சேர்த்த பாலை நிவேதனம் செய்யுங்கள். முடிந்தால் பால் பாயசமும்   நைவேத்யம் செய்யலாம்.
 
இந்தக் கலச அமைப்பினை அப்படியே வைத்திருந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அடுத்த விஜயதசமியன்றும் முதல் பூஜையை இதற்கே செய்ய வேண்டும்.  கொலுவுக்கு உரிய நிவேதனமும் முதலில் இந்தக் கலச அமைப்பிற்கே செய்ய வேண்டும். 
 
அம்பிகை பற்றிய பாடல்களை படியுங்கள், கேளுங்கள். தினமும் இந்த பூஜையை செய்து முடிக்கும் வரை உணவு உட்கொள்ளாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சிறிதளவு பால், பழம் எடுத்துக் கொள்ளலாம். 


இதில் மேலும் படிக்கவும் :