அதிக மருத்துவப்பயன் உடைய செந்நாயுருவி !!
செந்நாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும் இதற்குண்டு. புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர்.
செந்நாயுருவியே தெய்வீக ஆற்றல் பெற்றது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ குணங்களாகும்.
நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.
நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
நாயுருவி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.
நாயுருவிச்செடி இலையை பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும். விட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.
மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.
நாயுருவி இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.