விளக்கெண்ணெய்யின் மருத்துவ பயன்கள் !!
விளக்கெண்ணெய் ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தாவர எண்ணெய் ஆகும். இது மற்ற எண்ணெய்களை விட அதிக அடர்த்தி கொண்டது. எனவே சற்று பிசுபிசுப்புடன் இருக்கும். விளக்கெண்ணெய் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவப்பயன்கள் நிறைந்தது. மருத்துவத்தில் பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
விளக்கெண்ணெய் ஒரு அறிய மருந்தாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம் இதில் இல்லாத நன்மைகளே இல்லை எனலாம். விளக்கெண்ணெய் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
நம்முடைய முன்னோர்கள் விளக்கெண்ணெய்யை பல உடல் நலப் பிரச்சினைகளுக்கான தீர்வாகப் பயன்படுத்தினார்கள். அதிலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டைத் தணிப்பதற்கும் முதல் கருவியாக விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
விளக்கெண்ணெய் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதற்கு அதன் பிசுபிசுப்பு தன்மையே காரணம். இதை 15 மில்லி லிட்டர் அளவில் குடித்து வந்தால் இறுகிய மலத்தை இலகுவாக்கி வெளியே தள்ளுகிறது. ஆனால் அதிகமாக குடிக்க கூடாது. ஏனெனில் இது குடல் தசைகளை வேகமாக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்திவிடும். இந்த எண்ணெய்யை அளவுக்கு அதிகமாக அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
நம் சருமம் சுருங்க காரணம் சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவது தான். சருமம் சுருங்குவதால் இளவயதிலேயே வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தும் போது அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே தினமும் காலையில் கண்கள், வாய், கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் விளக்கெண்ணெய்யை தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். உங்க சருமம் இளமையாக இருக்கும்.