வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்ட சோற்றுக் கற்றாழை

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.


 


கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
 
எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது. தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
 
1. சோற்றுக் கற்றாழை ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால் கருமை, கரும் புள்ளி ஏற்படாமல் காக்கும்.
 
2. கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
 
3. கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஸ்லிம் ஆகும்.
 
4. சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
 
5. மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
 
6. வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும். கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
 
7. இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
 
8. தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
 
9. மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
 
10. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.