தினமும் தொடர்ந்து பழவகைகளை எடுத்துக்கொள்வது சரியா...?
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நம் உடலுக்குள் எட்டிப்பார்க்காது. தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது.
ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மாம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச் சத்து, தாது உப்புக்கள் மற்றும் பாலிபீனாலிக் ஃபிளவனாய்ட் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளன. இதுதவிர, வைட்டமின் ஏ, பி6, சி, இ ஆகியவை நிறையவே உள்ளன.
பலாப் பழம் எளிதில் செரிமானத்தைக் கொடுக்கும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், குடலைப் பாதுகாக்கிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது.
வாழையில் உள்ள ப்ரக்டோஸ் போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது.
மாதுளம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கிரானடின் பி உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கின்றன. மேலும் சரும பிரச்னைகளைத் தவிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.
அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.
Edited by Sasikala