திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அற்புத மருத்துவ குணம் நிறைந்த நாயுருவி இலை....!

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்.
நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்;  சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை  போன்றவற்றைக் குணமாக்கும்.
 
நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும். நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.
நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது  பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும். நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில்  சீழ் வடிதல் நிற்கும்.
 
நாயுருவி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.
 
ஆறாத புண் ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும். இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.
 
விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும். மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில்  வைத்துக் கட்டி வர இதம் தரும்.