புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்ட கோவைக்காய் !!

கோவைக்காய் சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழ்கிறது. இதன் இலை, காயில் உள்ள குளுக்கோஸ் 6 பாஸ்பேட் என்ற என்சைம் கல்லீரலில் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. 

சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம். 
 
சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசும் வழக்கம் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. 
 
வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும். 
 
பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம். உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும். 
 
கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது. கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும்.