1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 31 மார்ச் 2014 (16:47 IST)

சோனியா மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்தி இத்தாலிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ- வின் அநாகரீக பேச்சால் சர்ச்சை

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் தலைவர் மற்றும்  துணை தலைவர் ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டு மீண்டும் இத்தாலிக்கு அனுப்பிவைக்கப்படவேண்டுமென பேசி பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   
 
ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் பேசுகையில்,  பா.ஜ.க மத்தியில் ஆட்சியமைத்த பிறகு காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர்  ராகுல் காந்தி இருவரும் அவமானப்படுத்தப்பட்டு இத்தாலிக்கே அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று பேசினார். 
 
ஹீராலால் ரேகரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்த அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், நான் தனிப்பட்ட முறையில் யார் பெயரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார். 
 
சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு, துண்டாக வெட்டுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், தற்போது பாஜக எம்.எல்.ஏ வின் அநாகரீக  பேச்சு தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.