பிரபல நடிகையை ஆபாசமாக தாக்கிய இளைஞர்: அதிரடியில் இறங்கிய போலீஸ்!
மலையாள நடிகையான பார்வதி தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் பிரபலமான இவர் சமீபத்தில் நடிகர் மம்முட்டி குறித்து கூறிய கருத்து அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
நடிகர் மம்முட்டி கசாபா என்ற படத்தில் பெண்களை இழிவு படுத்தும் விதமாக நடித்தது குறித்து பார்வதி சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் விமர்சித்திருந்தார். இது மம்முட்டி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மம்முட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகை பார்வதிக்கு மிரட்டல்கள் விடுத்தனர். மேலும் ஆபாச தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த நடிகை பார்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த புகாருக்கு கேரள காவல்துறையும், சைபர் கிரைம் பிரிவும் இணைந்து செயல்பட்டனர்.
அதன்படி திருச்சூரை சேர்ந்த 23 வயதான பிரிண்டோ என்ற வாலிபரை கைது செய்தனர். அந்த வாலிபர் மம்முட்டியின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர். இவர் டுவிட்டரில் நடிகை பார்வதிக்கு பல மிரட்டல்களை விடுத்துள்ளார். அவர் மீது தகவல் தொடர்பு சட்டத்தின் 67-வது பிரிவின்படி மின் ஊடகத்தில் ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்ற செயலில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய உள்ளதாக கேரள காவல்துறை கூறியுள்ளது.