1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 28 மே 2015 (18:04 IST)

வரதட்சணை கொடுமை: இளம்பெண்ணை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்

ஒடிசாவில் வரதட்சணை தொடர்பாக இளம்பெண் ஒருவரை உறவினர்கள் உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

 
அந்த பெண் தீ காயத்தில் பலியாகி உள்ளார்.  அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஜஜ்பூர் மாவட்ட எஸ்.பி. ஏ.கே.சாஹு கூறும்போது, இந்த விவகாரம் குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவத்திற்கு பின் அந்த பெண்ணின் உறவினர்கள் கிராமத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.  எனவே, யாரும் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.
 
இது குறித்து பெண்ணின் தந்தை கடந்த செவ்வாய் கிழமை இரவு வரதட்சணை கொடுமையால் மரணம் என்ற அடிப்படையில் மகளின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.  அந்த புகாரில் பெண்ணின் தந்தை சுரேந்திர குமார் ரவுட் தெரிவித்துள்ளது குறித்து போலீசார் கூறும்போது, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, சஹடா பகுதியை சேர்ந்த பிரசாந்த் நாயக் என்பவருக்கு தனது மகள் சுசிஸ்மிதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
 
திருமணத்தின்போது, மணமகன் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணை தொகையான ரூ.2.2 லட்சம் பணம் மற்றும் 250 கிராம் தங்க நகைகள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.  ஆனால், பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் திருப்தியடையாமல் மற்றொரு ரூ.2 லட்சத்தை கொண்டு வரும்படி துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர்.  இதனை அறிந்த அந்த பெண்ணின் தந்தை ஒன்றரை வருடங்களில் 4 தவணைகளாக ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார் என எப்.ஐ.ஆர். பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.
 
ஆனால் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து சுசிஸ்மிதாவின் உறவினர்கள் மற்றொரு ரூ.2 லட்சத்தை கொண்டு வரும்படி நெருக்கடி அளித்து கொடுமை செய்துள்ளனர்.  கடந்த வருட மே மாதம் பேர குழந்தை பிறந்த 21வது நாள் கொண்டாட்டத்தில் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அந்த குடும்பத்தினர் மீண்டும் ரூ.1 லட்சம் பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி, கொடுமை செய்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மாலை 4 மணியளவில் குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.  அதில் பேசிய மகளின் உறவினர்கள் சஹடா பகுதியில் உள்ள தங்களது வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளனர்.  அங்கு சென்றபோது வீடு வெளிப்புறம் பூட்டி கிடந்துள்ளது.  அருகில் வசிக்கும் நபர் ஒருவர் கூறியதை அடுத்து, தர்மசாலாவில் உள்ள உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு குமார் சென்றுள்ளார்.
 
அங்கு மருத்துவமனை வராண்டாவில் அவரது மகள் கிடந்துள்ளார். அவரது உடல் சாக்கு பை ஒன்றால் கட்டப்பட்டு கிடந்துள்ளது. அந்த பெண்ணின் உறவினர்கள் யாரும் அங்கு இல்லை.  தனது மகளை தீ வைத்து கொளுத்தி விட்டு மருத்துவமனை வராண்டாவில் போட்டு விட்டு தற்கொலை செய்து உள்ளார் என்பதுபோல் காட்டியுள்ளனர் என எப்.ஐ.ஆர். பதிவில் கூறப்பட்டுள்ளது.