வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (11:16 IST)

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை?. ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற மறுப்பு.!!

hemant
ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கைக்கு  எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தி உள்ளது.
 
ஜார்க்கண்டில் காங்கிரஸ்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
 
இதனைத் தொடர்ந்து,  ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகியதை அடுத்து  அமலாக்கத்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். 
 
hemanth arrest
இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்திய நீதிபதிகள், ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஜாமீன் மனுவை விசாரிக்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.