வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (20:40 IST)

தண்ணீர் திறந்துவிட முடியாது - அடம்பிடிக்கும் சித்தராமையா

கர்நாடகாவில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது என்றும் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

 
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவை நிறைவேற்றாமல், கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியது.
 
ஆனால் கர்நாடகாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டபேரவை தீர்மானம் உச்சநீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்று கூறி குட்டு வைத்தது.
 
மேலும், தமிழகத்திற்கு காவிரியில் தினமும் 6 ஆயிரம் கனஅடி வீதம் 28ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நாளை மறுநாள் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. தவிர, இரு மாநில தலைமை செயலாளர்கள் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
 
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா இன்று பெங்களூரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். முடிவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
 
இந்நிலையில், மத்திய அரசு இரு மாநிலங்களுக்கிடையே டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைமை செயலாளர் ராம மோகனராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஆர். சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.
 
இதற்கிடையில், பெங்களூருவில் இன்று காலை இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
 
பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ”கர்நாடகாவில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது. தண்ணீர் திறக்க மறுப்பது குறித்து மத்திய மந்திரி உமா பாரதியிடம் தெரிவிக்கப்படும்.
 
சட்டப்பேரவை தீர்மானத்தை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து கட்சி கூட்ட முடிவு குறித்து டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும். உச்சநீதிமன்ற கருத்து அடுத்த விசாரணையில் மாற்றி அமைக்கப்படலாம். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து நாளைய கூட்டத்திற்கு பின்னர் முடிவு எடுக்கப்படும்” என்றார்.