வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (20:35 IST)

தண்ணீர் பற்றாக்குறை சாதிய மோதல்களாக உருவெடுக்கும் - அதிகாரிகள் எச்சரிக்கை

தண்ணீர் பற்றாக்குறையால் அது சாதிய மோதல்களாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


 
நாட்டிலுள்ள முக்கிய 10 மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சியினால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை சாதிய மோதல்களாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத் துறை செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
நாட்டிலுள்ள மத்தியப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திரா, சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 10 மாநிலங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
 
அம்மாநிலங்களில் உருவாகியுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் அது சாதிய மோதல்களாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக நீர்வளத்துறையின் மூத்த அதிகாரி கூறும்போது, ”வறட்சி நிலவும் மத்தியப் பிரதேசத்தில் 94 விழுக்காடு நிலத்தடி நீர் வற்றிவிட்டது. பெனிகாஞ்ச் அணை நீர்வரத்து இன்றி காய்ந்து போனதை தொடர்ந்து அருகிலுள்ள சாட்டர்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் சாதிய மோதல்களை உருவாக்கியுள்ளது.
 
அருகிலுள்ள கிராமங்களின் மக்கள் அங்குள்ள மிக சொற்ப எண்ணிக்கையில் உள்ள கிணறுகளிலிருந்து அதிகமாக நீர் எடுக்கத் தொடங்கிவிட்டதால், குறிப்பாக, அங்குள்ள சாதி ஆதிக்க சக்திகள் அதிகமாக எடுத்து செல்வதால் தலித் மக்களுக்கு நீர் கிடைப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
மேலும் சாதி ஆதிக்க சக்திகள் இருக்கின்ற சில கிணறுகளையும் ஆதிக்கம் செய்வதால் எப்போதுவேண்டுமானாலும் இந்த ஆதிக்கத்தை எதிர்த்து மோதல்கள் உருவாகலாம்.
 
கர்நாடகாவில் 79 விழுக்காடு நிலத்தடி நீர் வற்றிவிட்டதால் பல இடங்களில் தண்ணீர் எடுப்பதில் பல இடங்களில் தண்ணீர் பிடிப்பதில் தலித் மக்களுக்கும் மற்ற சாதியினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தண்ணீர் கிடைக்காமல் கொதித்துக் கொண்டிருக்கும் மக்களினால் பெரும் கலவரங்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
 
இதே போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் 86 விழுக்காடு நிலத்தடி நீர் வற்றி விட்டதால் தானே மாவட்டத்திலுள்ள பழங்குடி மக்கள், தான்சா, மோடாஸ்கர் மற்றும் பாட்சா அணைகளும் வறண்டுவிட்டதால் பல இடங்களில் தண்ணீர் செல்லும் குழாய்களில் ஓட்டை போட்டு நீர் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
 
உத்தரப்பிரதேசத்தில் 11 விழுக்காடு நிலத்தடி நீரும் தெலுங்கானாவில் 18 விழுக்காடு, ராஜஸ்தானில் 8 விழுக்காடு, ஜார்க்கண்ட்டில் 13 விழுக்காடு, ஒடிசாவில் 24 விழுக்காடு நீரே உள்ளது. இது அங்கு நிலவுகின்ற வறட்சியின் அபாயத்தை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.