புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 15 ஜூலை 2017 (10:07 IST)

சசிகலா விவகாரத்தில் ரூபாவுக்கு குட்டு வைத்த முதல்வர்!

சசிகலா விவகாரத்தில் ரூபாவுக்கு குட்டு வைத்த முதல்வர்!

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் அதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.


 
 
இந்நிலையில் அவர் போலீஸ் மற்று சிறைத்துறை விதிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
 
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்டார் ரூபா. இவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
 
மேலும் இது தொடர்பாக அடிக்கடி ரூபா ஊடகங்களையும் சந்தித்து விளக்கம் அளித்தார். இதனால் இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
 
ஆனாலும் ரூபா தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக மீண்டும் ஊடகங்களை சந்தித்தார். இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு அதற்கான குழுவையும் அமைத்தார்.
 
இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அதே நேரத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக டிஐஜி ரூபா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்க வேண்டும்.
 
ஆனால் அதற்கு முன்னரே ரூபா ஊடகங்களில் பேசியது தவறானது. அவர் அடிக்கடி மீடியாவை சந்தித்து பேசியது சரியானது அல்ல. போலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ரூபா பேட்டி கொடுத்தது விதிமுறை மீறிய செயலாகும். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறினார்.