ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (05:59 IST)

கிங்ஃபிஷர் என்று மல்லையா பெயர் வைத்த காரணம் தெரியுமா?: நீதிபதி கிண்டல்

கிங்ஃபிஷர் பறவைக்கு எல்லைகள் தெரியாது, எந்த எல்லையும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதைப்போல மல்லையாவையும் பறந்து சென்று விட்டார் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 

 
2011ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையிலும், 2012ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 2012 வரையிலான காலத்தில் பயணிகளிடமிருந்து விமானப் பயணக் கட்டணமாக வசூலித்த தொகைக்கு, கிங்ஃபிஷர் நிறுவனம் ரூ.32.68 கோடி சேவை வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.
 
இது தொடர்பாக சேவை வரித்துறை செய்திருந்த மேல்முறையீட்டு மனு மற்றும் மல்லையாவின் சொந்த விமானத்தை ஏலம் விடுவதை நிறுத்துமாறும் கோரியிருந்த மனு ஆகியவற்றின் மீதான விசாரணை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்பு நடைபெற்றது.
 
அப்போது நீதிபதி தர்மாதிகாரி, “மல்லையா ஏன் கிங்ஃபிஷர் என்ற பெயர் வைத்தார் என்று யாருக்காவது தெரியுமா? வரலாற்றில் இத்தகைய பொருத்தமான பெயரை ஒருவரும் தனது நிறுவனத்திற்கு தேர்வு செய்திருக்க முடியாது.
 
ஏனெனில் கிங்ஃபிஷர் என்பது பறவையின் பெயர், அதற்கு எல்லைகள் தெரியாது, எந்த எல்லையும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அதைப்போலவே மல்லையாவையும் ஒருவரும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பறந்து சென்றுவிட்டார்” என்று கூறினார்.
 
மேலும், கடன் மீட்பு ஆணையம் 2014-ஆம் ஆண்டு அளித்த உத்தரவை எதிர்த்து செய்த மனுவின் மீதான விசாரணையை தள்ளி வைத்தனர்.