ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (12:45 IST)

விஜய் பட ஸ்டைலில் வீடியோ கால் மூலமாக நடந்த பிரசவம்! இரட்டை குழந்தைகள் பிறந்ததால் ஆச்சர்யம்!

மத்திய பிரதேசத்தில் மழையில் மாட்டிக் கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலமாக பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவீணா உய்கே என்ற பெண். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். சமீபமாக வட மாநிலங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ள சூழலில் மத்திய பிரதேசத்தில் பெய்த மழையால் ஜோராவாடி மக்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாதபடி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில் ரவீணாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்படுள்ளது. இதுகுறித்து ரவீணாவின் கணவர் மாவட்ட மருத்துவமனையை தொடர்பு கொண்டு தாங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது குறித்தும் கூறியுள்ளார். மருத்துவ குழு அந்த கிராமத்திற்கு செல்ல முயன்ற நிலையில் வெள்ள நீரை தாண்டி அவர்களால் செல்ல முடியவில்லை.


இதனால் கிராமத்தில் மருத்துவம் தெரிந்த பெண்ணை வர செய்து அவருடன் வீடியோ கால் மூலமாக பேசியுள்ளார் மருத்துவர் சிர்சாம். விஜய் நடித்த நண்பன் படத்தில் வருவது போல வீடியோ கால் மூலமாக கர்ப்பிணி பெண்ணுக்கு அடுத்தடுத்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கி பத்திரமாக குழந்தை பிறக்க செய்துள்ளார்கள். அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. மறுநாள் வெள்ளம் வடிந்ததும் தாய், சேய்கள் பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாதாரணமாக ஒரு குழந்தையை மருத்துவர்கள் ஆலோசனை, உதவி இல்லாமல் பெற்றெடுப்பதே ஆபத்தான காரியம். ஆனால் வீடியோ கால் மூலமாக சரியான மருத்துவ ஆலோசனைகள் சொல்லப்பட்டு இரட்டை குழந்தைகள் பத்திரமாக பெற்றெடுக்கப்பட்ட சம்பவம் அக்கிராமத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K