1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (18:11 IST)

மறைந்த சிங்கப்பூர் அதிபருக்கு எதிரான வீடியோ : 17 வயது சிறுவன் மீது வழக்கு

சிங்கப்பூரில் கிறிஸ்தவ மதத்தையும், சமீபத்தில் மறைந்த அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூவையும் விமர்சித்து, இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பதின்ம வயது சிறுவன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 
ஞாயிற்றுக் கிழமையன்று லீ குவான் யூவின் இறுதிச் சடங்கு முடிவடைந்த சிறிது நேரத்தில் அமோஸ் யீ என்ற இந்த பதினாறு வயதுச் சிறுவன் கைதுசெய்யப்பட்டார். 20,000 சிங்கப்பூர் டாலர்கள் மதிப்பிலான பிணையில் பிறகு விடுவிக்கப்பட்டார்.
 

 
இந்த சிறுவன் வெளியிட்ட வீடியோ, லீ குவான் யூ மறைந்த துக்கத்தில் இருந்த சிங்கப்பூர் மக்களிடம் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது. காவல்துறையில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாயின.
 
லீ இருந்த காலகட்டத்திலேயே, வெறுப்பைத் தூண்டும் செயல்களுக்கு எதிராக சிங்கப்பூரில் மிகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிங்கப்பூரை வளமான நாடாக வடிவமைத்த சிற்பியாக லீ குவான் யூ கருதப்படுகிறார்.
 
ஆனால், அவர் அந்நாட்டின் பிரதமராக இருந்த 31 ஆண்டு காலத்தில், எதிர்ப்பாளர்களைக் கடுமையாக அடக்கியதோடு, சமூக செயல்பாடுகளிலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அரசியல் ரீதியாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
கடந்த வெள்ளிக்கிழமையன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவில், லீயின் மரணத்தை கொண்டாடும் விதமாகவும் சிங்கப்பூரில் அவர் விதித்திருந்த கட்டுப்பாடுகளை விமர்சித்தும் அந்தச் சிறுவன் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் "பயங்கரமான மனிதர்" என்றும் கூறியிருந்தான்.
 
லீ-யை விமர்சிக்க சிங்கப்பூர்வாசிகள் பயப்படுவதாக கூறியிருந்த அமோஸ் யீ, மிக மோசமான முறையில் ஏசு கிறிஸ்துவுடனும் அவரை ஒப்பீடு செய்திருந்தார். யீ உடனடியாக இந்த வீடியோவை அகற்றிவிட்டாலும், யூ டியூப் போன்ற இணைய தளங்களில் இதன் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன.
 
வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யீ மீது, எந்த ஒரு நபரின் மதம் மற்றும் இன ரீதியான உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துதல், ஆபாசமான விஷயங்களை விநியோகம் செய்தல், துன்புறுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
 
இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அபராதமும் மூன்றாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். யீ-க்கு 17 வயதாவதாக முன்னதாகக் கூறப்பட்டது. இதனால், அவர் வளர்ந்த நபராகவே கருதப்பட்டு விசாரிக்கப்படுவார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர் எதையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
 
நீதிமன்றத்திற்கு வெளியில் பேசிய யீ-யின் தந்தை, லீ குவான் யூவின் மகனும் தற்போதைய பிரதமருமான லீ சியென் லூங்கிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
 
சிங்கப்பூரில் பல இனத்தைச் சேர்ந்தவர்களும் வசிப்பதால், அவர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களுக்கு எதிரான சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
சிங்கப்பூரின் துவக்க காலங்களில், பல முறை இன ரீதியான வன்முறைகள் வெடித்திருக்கின்றன. பல மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் முக்கியமான கவிஞர் ஒருவரும்கூட லீ குறித்து வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்தனர் என்றாலும்கூட, அமோஸ் யீ மட்டுமே கைது நடவடிக்கைக்கு ஆளானார்.
 
யீ-யை விடுவிக்கக்கோரி கிறிஸ்டியன் சிங்கப்பூரியன் என்ற அமைப்பு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளது. "சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எம்மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் பணியாற்றுகிறார்கள் என்பதை இந்தக் கைது சுட்டிக்காட்டுவதாக" ஊடகங்களின் உரிமைக்காக செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கருத்துத் தெரிவித்துள்ளது.
 
"ஆமோஸ் யீயை அதிகாரிகள் உடனடியாக விடுவிப்பதோடு, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சிங்கப்பூரின் காலாவதியான சட்டங்களிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்" என அந்த அமைப்பின் ஆசியச் செய்தித் தொடர்பாளர் பாப் டயட்ஸ் தெரிவித்துள்ளார்.