என்ன ஆனாலும் இறுதி தேர்வு நடத்தியே தீருவோம்! – யுஜிசி திட்டவட்டம்!
கொரோனா பாதிப்பினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் உள்ளதால் கல்லூரி காலம் முடிந்தும் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் முந்தைய மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி வழங்க மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த உச்சநீதிமன்ற விவாதத்தில் யுஜிசி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தியே ஆக வேண்டிய சூழல் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் யுஜிசியின் கொள்கைகளை மாநில அரசுகளால் மாற்ற முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.