1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (17:47 IST)

`டி-ஷர்ட்’ அணிந்த பெண்கள் குரங்குகளா? - தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்பு

அசாமில் `ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷ்ர்ட்’ அணிந்த பெண்களை குரங்குக்கு நிகராக கூறிய அம்மாநில தொலைக்காட்சி சேனலின் செய்திக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 

 
அசாமில் உள்ள `ப்ரதிதின் டைம்’ எனும் தொலைக்காட்சி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் ஒரு குரங்கு பேன்ட் அணிந்திருப்பது போல காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னணியில், இப்போதெல்லாம் குரங்குகள் கூட பேண்ட் அணிய ஆரம்பித்துவிட்டன. எப்படி சலவை செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொண்டுவிட்டன.
 
ஆனால் குவாஹாட்டியில் உள்ள இளம்பெண்கள் தங்களின் வசதிக்காக `ஷார்ட்ஸ்’ அணிய ஆரம்பித்துவிட்டார்கள். தங்களின் உடலை எடுத்துக்காட்டுவதற்குப் பெயர்தான் பேஷன் என்று நினைக்கிறார்கள் என்று அசாமிய மொழியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.
 
அப்போது, பல இளம்பெண்கள் ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு சாலையில் நடக்கும் காட்சிகள் அதில் காட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் உரிமை அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்தினர். ஆனால், எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படாத பட்சத்தில், தடை உத்தரவை மீறியதாக கூறி, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து ப்ரதிதின் டைம் சேனலின் ஆசிரியர் நிதுமோனி சைகியா கூறும்போது, “இந்தச் செய்தியின் மூலம் மக்களின் மனதை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இந்தச் செய்தியைச் சேகரித்த நிரூபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
எனினும், இதுபோன்ற உடைகளை அணிந்துகொண்டு எந்தப் பெண்ணாவது `நாம்கர்’ (அசாம் மாநிலத்தவரின் பாரம்பரிய வழிபாட்டுத் தலம்) பகுதிக்குச் செல்ல முடியுமா? முடியாது. சில விஷயங்கள் எப்போதும் அசாமிய கலாச்சாரத்தின் பகுதியாக மாற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.