1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (14:07 IST)

கோவையில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 5 பேர் கைது; துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பு

கோவையில், கேரள மாவோயிஸ்ட் தலைவர் ரூபேஷ் உள்பட 5 பேரை துப்பாக்கி முனையில் கியூ பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். கைதான 5 தீவிரவாதிகளிடமும் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

 
கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கேரள மாநில அதிரடிப்படை நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தி மாவோயிஸ்ட்கள் சிலரை பிடித்தனர்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவோயிஸ்ட்கள் கோவை எல்லைப்பகுதியில் உள்ள அட்டப்பாடியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை தீவைத்து கொளுத்தினார்கள். வனப்பகுதியில் ஒருவரையும் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
 
கேரளாவில் மாவோயிஸ்ட்களை பிடிக்க போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்குவதாகவும் தமிழக போலீசார் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள போலீசார் தமிழக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து தமிழக போலீசார் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கியூ பிரிவு போலீசாரும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
 
இந்த நிலையில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவினர் பதுங்கி இருப்பதாக தமிழக கியூ பிரிவு போலீசார் மற்றும் ஆந்திர மாநில சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதற்கிடையில் கருமத்தம்பட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அப்போது கருமத்தம்பட்டி - அன்னூர் சாலை பகுதியில் ஒரு காரில் வந்த 5 பேர் காரை நிறுத்தி, சதாசிவம் என்பவரது டீக்கடையில் டீ குடித்தனர். அப்போது தமிழக கியூ பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும் துப்பாக்கி முனையில் இந்த காரை சுற்றி வளைத்தனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து விட்டனர் என்பதை உணர்ந்த 5 பேரும் கோஷம் எழுப்பியவாறு போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
 
பிடிபட்டவர்கள் கேரள மாவோயிஸ்ட்கள் என்றும், இதில் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவின் தலைவர் என்றும் தெரியவந்தது.
 
அவர்கள் விவரம் வருமாறு:-

ரூபேஷ் (வயது 40), கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர். இவர் மாவோயிஸ்ட் தீவிரவாத கும்பலுக்கு தலைவர் போல் செயல்பட்டு வந்தார். அவரோடு சைனா என்ற திருச்சூரைச் சேர்ந்த பெண். இவர் ரூபேசின் மனைவி ஆவார். மேலும், அனூப் (30), கண்ணன் (25) மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 

 
இதில் கண்ணன் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவினர் தமிழ்நாட்டில் பதுங்க இந்த 2 பேரும் உதவியதாக தெரிகிறது.
 
கைதான ரூபேஷ், கேரள மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு கீழ் 50க்கும் மேலானவர்கள் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
 
ரூபேஷ் சட்டம் படித்துள்ளார். பின்னர் இந்த இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் தீவிரவாதி சுந்தரி என்பவரும், ரூபேசின் இயக்கத்துடன் தொடர்பு வைத்து இருந்ததாக தெரிகிறது.
 
கைதான 5 பேரையும் கியூ பிரிவு போலீசார் கோவை கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாவோயிஸ்ட் தலைவர் பிடிபட்டது குறித்து கேரளா மற்றும் ஆந்திர போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கேரள மற்றும் ஆந்திர போலீசாரும் கோவை விரைந்துள்ளனர்.
 
இதுகுறித்து மேற்குமண்டல ஐ.ஜி. சங்கர் கூறும்போது, பிடிபட்ட தீவிரவாதிகள் 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தொடர்பான விவரங்கள் விசாரணைக்கு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். கோவை அருகே மாவோயிஸ்ட் இயக்க தலைவர் உள்பட 5 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.