பசிக்காக பாம்பை வேட்டையாடிய மூன்று இளைஞர்கள்! ஊரடங்கு எதிரொலி!
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மூன்று இளைஞர்கள் சாப்பிட பாம்பைப் பிடித்துக் கொன்றுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், பாம்பை வேட்டையாடி உணவு சமைத்து சாப்பிட முயன்றுள்ளனர்.
பாம்பைப் பிடித்துக் கொலை செய்த அவர்கள் அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட அதையறிந்த போலிஸார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் அரிசி இல்லாத காரணத்தால் காடுகளில் வேட்டைக்கு சென்றதாகவும் அப்போது இந்தப் பாம்பை உணவுக்காக வேட்டையாடியதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் இவர்களின் கருத்தை அருணாசலப் பிரதேச அரசு மறுத்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மூன்று பேர் மீதும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் வேட்டையாடியது ராஜ கருநாகம் எனும் அரிய வகைப் பாம்பு என்பதால் இளைஞர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.