புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (20:46 IST)

ஸ்விகி, ஸொமாட்டோவிலிருந்து விலகிய 1200 உணவகங்கள்: காரணம் இதுதானாம்?!

ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைகளிலிருந்து 1200க்கும் மேற்பட்ட உணவகங்கள் வெளியேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலத்தில் மதரீதியான சில சிக்கல்களை ஸொமாட்டோ, ஊபர் போன்ற உணவு ஆப் நிறுவனங்கள் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசிய உணவு கழகத்தை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த அப்ளிகேசன்களில் இருந்து விலகியுள்ளன.

உணவு அப்ளிகேசன்களினால் கஸ்டமர்களுக்கு சலுகைகள் நிறைய கிடைத்தாலும் உணவகங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உணவு சேவை அப்ளிகேசன்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல உருவானதால் பலரும் வெவ்வேறு அப்ளிகேசன்களை உபயோகிக்கின்றார்கள். அதனால் உணவகங்களும் பல்வேறு ஆப் நிறுவனங்களோடு தங்களை இணைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி இணைத்து கொள்ளும்போது கஸ்டமர்களை ஈர்க்க பல்வேறு சலுகை விலைகளை வழங்க வேண்டியதிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு அப்ளிகேசனிலும் ஒவ்வொரு சலுகை. இதனால் உணவுப்பொருட்கள் சலுகை விலையில் மட்டுமே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கோல்டு மெம்பர்ஷிப் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தன. அதில் இணைபவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக தள்ளுபடி பெறலாம். மேலும் விலை அதிகம் கொண்ட பானங்கள், உணவுகள் 50 சதவீதம் வரை கழிவில் கிடைக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டது. அனைத்து உணவு அப்ளிகேசன்களும் இதே முறையை தொடர ஆரம்பித்ததால் உணவகங்களின் எதிர்காலம் இன்னும் அதள பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. அதற்கு உச்சாணி கொம்பு வைத்தது போல் ஸொமாட்டோ நிறுவனம் இன்ஃபினிட்டி டைனிங் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் குறிப்பிட விலையை மட்டும் செலுத்தி விட்டு மெனுவில் உள்ள எந்த ஒரு பொருளை ஆர்டர் செய்தாலும் இரட்டிப்பாக அந்த உணவு வழங்கப்படும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து உணவகங்கள் கூறுகையில் “இன்பினிட்டி டைனிங், கோல்டு மெம்பர், சிறப்பு சலுகைகள் என தொடர்ந்து தர வேண்டியது இருப்பதால் உணவகங்கள் தங்களின் உணவின் தரத்தை குறைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அல்லது உணவு உற்பத்தியில் தடுமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.

மேலும் மக்கள் உணவகங்கள் வந்து சாப்பிடும்போது நாங்களே உணவு பறிமாறி அவர்களிடம் குறை நிறைகளை கேட்டறிவோம். இது உணவகங்களுக்கும், கஸ்டமருக்கும் இடையே ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் இந்த ஆன்லைன் உணவு ஆப்கள் வந்தபிறகு எங்கள் கஸ்டமர்கள் யார் என்பதே எங்களுக்கு தெரிவதில்லை.

அதுமட்டுமல்லாமல் பல உணவு அப்ளிகேசன்களிலிருந்தும் கொடுக்கும் லாப சதவீதம் குறைவாகவே உள்ளது. உணவு அப்ளிகேசன்கள் வரும் முன்னரும் “இந்திய உணவு திருவிழா” போன்றவற்றை நடத்தி அதன் மூலம் மக்களுக்கு சலுகை விலையில் தரமான உணவு வகைகளை உணவகங்கள் கொடுத்து வந்திருக்கின்றன. சலுகை என்பது எப்பொழுதாவது கொடுப்பது. அதை எப்போதும் கொடுத்தால் உணவை தரமாக கொடுக்க இயலாது என்று கருத்து தெரிவிக்கின்றன உணவகங்கள்.

இப்படியாக பல்வேறு பிரச்சினைகளால் வெளியேறும் உணவகங்கள் மக்களை உணவகங்களுக்கு ஈர்க்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் “உணவகங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி திடீரென்று வெளியேறி இருப்பது அதிர்ச்சியை தருகிறது.

உணவகங்கள், கஸ்டமர்கள் இருவரையும் திருப்தி செய்யும் வகையிலேயே இதுவரை சலுகை திட்டங்களை வடிவமைத்து வந்திருக்கிறோம். எங்களது திட்டங்களான கோல்டு மெம்பர்ஷிப், இன்பினிட்டி டைனிங் போன்றவை பெருவாரியான மக்களை பல உணவகங்களை நோக்கி ஈர்த்துள்ளது. வணிக ரீதியாகவும் அது வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் உணவகங்களுக்கு பாதிப்பு இருக்குமானால் அதை சரிசெய்யவும் நடவடிக்கை எடுப்போம்.

சிலசமயம் நாங்கள் திட்டமிடாத சில விஷயங்களும் நடந்து விடுவது உண்டு. உணவகங்களுக்கும், கஸ்டமர்களுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்த தேவையான மாற்றங்களை செய்ய தயாராக உள்ளோம்.

அதனால் விலகி சென்ற உணவகங்கள் மீண்டும் ஸொமாட்டோவோடு இணைந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று மிகப்பெரும் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

யார் என்ன கதறினாலும் அதற்கு உணவகங்கள் செவிசாய்ப்பதாக இல்லை. தொடர்ந்து ஆன்லைன் உணவு அப்ளிகேசன் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதால் இந்திய தேசிய உணவு கழகம் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் இந்த அப்ளிகேசன்களோடு தொடர்வதா அல்லது நிறுத்தி கொள்வதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.