‘’இந்த நூற்றாண்டில், மிக மோசமான ரயில் விபத்து இது ‘’- முதல்வர் மம்தா பானர்ஜி
ஒடிசா ரயில் விபத்திற்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் 4 பேர் கொண்ட முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த நூற்றாண்டில், மிக மோசமான ரயில் விபத்து இது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சிக்கி 233 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த விபத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், மக்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு மோசமான விபத்தான ஒடிஷா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது.
பாக நாகாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் ஆய்வு செய்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பின்னர் செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ''ஒடிஷாவில் நடந்த ரயில் விபத்திற்குப் பாதுகாப்பு குறைபாடே காரணம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிறந்த விரைவு ரயில்களில் ஒன்று. நான் 3 முறை ரயில்வேதுறை அமைச்சராக இருந்துள்ளேன். நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டில், மிக மோசமான ரயில் விபத்து இது ''என்று தெரிவித்துள்ளார்.