1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:31 IST)

விரைவு ரயில்னா அதுக்குன்னு இப்படியா..? சீக்கிரமாக வந்து பயணிகளை ஏற்றாமல் சென்ற ரயில்!

Train
கோவாவில் இருந்து டெல்லி செல்லும் ரயில் ஒன்று குறிப்பிட்ட நேரத்திற்கு 1.30 மணி நேரம் முன்னதாகவே வந்து பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியா முழுவதும் இந்திய ரயில்வேயின் பல ரயில் சேவைகள் பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக ரயிலில் செல்லும் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று ரயில் தாமதமாக வருவது. ஆனால் நாசிக்கில் ஒரு ரயில் சீக்கிரமாக வந்தது பிரச்சினையாகி உள்ளது.

கோவாவில் இருந்து டெல்லிக்கு விரைவு ரயில் சேவை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் நாசிக் அருகே உள்ள மன்மத் ரயில் நிலையமும் ஒன்று. வழக்கமான நேரத்திற்கு வரவேண்டிய இந்த விரைவு ரயில் வழக்கத்திற்கு மாறாக அட்டவணை நேரத்திற்கும் 90 நிமிடங்கள் முன்னதாகவே மன்மத் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இவ்வளவு சீக்கிரமாக ரயில் அங்கு வந்த நிலையில் காத்திராமல் 5 நிமிடங்களில் புறப்பட்டு சென்றுள்ளது. ரயில் ஏறுவதற்காக அட்டவணை நேரத்திற்கு வந்த பயணிகள், ரயில் ஏற்கனவே சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 45 பயணிகளை ரயில் விட்டு சென்ற நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K