1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (11:37 IST)

பணம் இல்லை : மனைவியின் உடலை 60 கி.மீ. தள்ளி வந்த முதியவர்

பணம் இல்லை : மனைவியின் உடலை 60 கி.மீ. தள்ளி வந்த முதியவர்

ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லாததால், மரணமடைந்த தனது மனைவியின் உடலை, அவரது கணவர், ஒரு தள்ளு வண்டியில் வைத்து பல கிலோ மீட்டர் தூரம் தள்ளி வந்தது தெரிய வந்துள்ளது.


 

 
தெலுங்கானா மாவட்டம், மாய்கோட் கிராமத்தை சேர்ந்தவர் ராமுலு. அவரும், அவரின் மனைவி கவிதாவும், தொழு நோயால் பாதிக்கப்பட்டு, பல இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்து வந்தனர்.
 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, லிங்காம்பள்ளி ரயில்வே நிலையம் அருகே அவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, கவிதா உயிரிழந்தார். இதனையடுத்து, தனது மனைவியின் உடலை தனது சொந்த கிராமத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டும் என ராமுலு விரும்பினார்.
 
இதனையடுத்து, மனைவியின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்ய முயன்றார். ஆனால், அதற்கு ரூ.5 ஆயிரம் வரை செலவாகும் என தெரிய வந்துள்ளது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால், வேறு வழியின்றி மனைவின் உடலை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டே 60 கிலோ மீட்டர் வரை வந்துள்ளார். ஆனால், இரவில் வழி தெரியாமல்  வேறு பாதையில் சென்று விட்டார். 


 

 
தன்னுடைய நிலைமையை எண்ணியும், உடலில் போதிய சக்தி இல்லாததாலும், சோர்ந்து போய் நடுரோட்டிலேயே ராமுலு அழுதார். அதைக்கண்ட சிலர், அவருக்கு பண உதவி செய்ததுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் கவிதாவின் உடலை அவரின் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.
 
கடந்த ஆகஸ்டு மாதம், ஒடிசாவில், காசநோய் காரணமாக இறந்து போன தனது மனைவியின் உடலை 10 கிலோ மீட்டர் வரை, தனது உடலியேயே ஒருவர் தூக்கிச் சென்ற விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  தற்போது அதேபோல் மேலும் ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.