டில்லியை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
தலைநகர் டில்லியில் மிகப் பெரிய குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கூறியுள்ளது.
இந்த தாக்குதலை சுதந்திரதின கொண்டாட்டத்தின் போதோ அல்லது அதற்கு முன்போ தலைநகர் டில்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உளவுத்துறை அனுப்பியுள்ள தகவலில், ‘வடக்கு டில்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக‘ தெரிவித்துள்ளனர். மேலும் டில்லியின் மற்ற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘வாரணாசி, மதுரா, அயோத்தி ஆகிய மூன்று நகரங்களிலும் பெரிய அளவில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக‘ கூறப்படுகிறது.
இந்த நாசவேலை திட்டத்தை தீட்டிய அமைப்பு பற்றிய தகவலை உளவுத்துறை தெரிவிக்கவில்லை. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து, டில்லி, மதுரா, அயோத்தி, வாரணாசி ஆகிய 4 நகரங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விட்டார். அத் தொடர்ந்து, அந்த 4 அடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.