1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2015 (09:45 IST)

டெல்லியைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்: புலனாய்வுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

டெல்லியில் ஆள் இல்லா விமானம் மூலம் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக  மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
பெரு நகரங்களில் ஆள் இல்லாத குட்டி விமானங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் இந்த விமானங்களை கண்காணிப்பு பணிகளுக்காகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
 
இந்த விமானங்கள் 2 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும், 2 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும். மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில், 50 அடி உயரம் வரை பறக்கும். 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தை கண்காணிக்கும்படி இவை வடிவமைக்கப்பட்டு இருக்கும். இவை தரையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும்.
 
இந்நிலையில், டெல்லியில் தீவிரவாத இயக்கங்கள் ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் டெல்லி காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற இயக்கங்கள் ஆள் இல்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதனை தடுக்க உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து காவல்துறை தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.
 
அந்தக் கடிதத்தில், ஆள் இல்லா குட்டி விமானங்கள் விற்பனை செய்வோர், வாடகைக்கு விடுவோர் அனைவரையும் அடையாளம் காணவேண்டும். அவர்களிடம் சமீபத்தில் விமானங்களை விலைக்கு வாங்கியவர்கள் அல்லது வாடகைக்கு எடுத்தவர்கள் பட்டியலையும் பெற்று சரிபார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, டெல்லியில் அனுமதியின்றி ஆள் இல்லா குட்டி விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றிருந்தாலும் உரிய விசாரணைக்கு பின்னரே அவை பறக்க அனுமதிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.