வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (10:26 IST)

தேநீர் விருந்தை அரசியல் விருந்தாக பார்க்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை.!

tamilasai
தேநீர் விருந்தை அரசியல் விருந்தாக எதிர்கட்சியினர் பார்க்க வேண்டாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.
 
குடியரசு தினத்தையொட்டி நாளை மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநிலத் தலைவரை போல செயல்படுவதாகக்கூறி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
 
இதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சிகளும்  தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர், எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என பட்டியலிட்டால் பதில் சொல்ல தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
 
புதுச்சேரியில் எதிர்கட்சியினர் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த முறை அளித்த தேநீர் விருந்தில் எதிர்க்கட்சியினர் பங்கேற்பார்கள் என நினைத்ததன் காரணமாக அதிக அளவு சமைக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த முறை புறக்கணிப்போம் என அவர்கள் அறிவித்ததன் காரணமாக குறைவான அளவில் சமைத்துக் கொள்வதாகவும் கூறினார்..
 
மேலும்  எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவரும் தேநீர் விருந்தை அரசியலாக்காமல், ஆளுநர் விருந்தை அரசியல் விருந்தாக பார்க்காமல் எதிர்கட்சியினர் பங்கேற்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
 
எதிர்க்கட்சியினர் ராமர் கோயிலுக்கு அழைத்தாலும் வர மாட்டார்கள், விருந்துக்கு அழைத்தாலும் வர மாட்டார்கள். ஆனால் ஆளுநர் அரசியல் செய்கிறார்கள் என சொல்வார்கள் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். மேலும் வரும்  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை எனவும் முடிவு எடுக்கும்போது தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.