1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (19:08 IST)

சி.பி.ஐ. இயக்குனருக்கு எதிரான வழக்கு: அரசு சிறப்பு வழக்கறிஞர் கருத்தை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான வழக்கில், அவர் மீதான குற்றச்சாற்று குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞரின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடைய சிலர் கடந்த 15 மாதங்களில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாகவும், எனவே அவரை அந்த வழக்குகள் விசாரணையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணையின் போது, சி.பி.ஐ. இயக்குனரை அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தவர்களின் வருகை பதிவேடு பட்டியலை, அது தொடர்பான ஆவணங்களையும் பொதுநல அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
 
அந்த பட்டியலை அங்குள்ள சிலர் தன்னிடம் அளித்ததாகவும் கூறினார். ஆனால் பிரசாந்த் பூஷணின் புகாரை மறுத்து ரஞ்சித் சின்ஹா சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சித் சின்ஹா வீட்டில் பராமரிக்கப்படும் பார்வையாளர்களின் வருகை பதிவேடு பட்டியலை கொடுத்தது யார்? என்பது பற்றிய விவரத்தை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவேண்டும் என்று பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனால், வருகை பதிவேடு பட்டியலை தந்தவரின் பெயரை தெரிவித்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், எனவே அவரது பெயரை தெரிவிக்க இயலாது என்றும் கூறி பிரசாந்த் பூஷண் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது சி.பி.ஐ. இயக்குநர் வீட்டுக்கு வந்தவர்களின் வருகை பதிவேடு பட்டியலை தந்தவரின் பெயரை தெரிவிக்க இயலாதற்கு தொண்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
 
இதனையடுத்து வருகைப் பதிவேடு தந்தவரின் விவரத்தை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்ற தொண்டு நிறுவனம் விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்த உத்தரவை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரிக்கும் எந்த ஒரு வழக்கிலும் தாம் தலையிடவில்லை என்றும், எனவே தமக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சின்ஹா விடுத்த வேண்டுகோளை இன்று நிராகரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ இயக்குனர் சின்ஹாவின் வீட்டு வருகைப்பதிவேடு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அரசு சிறப்பு வழக்கறிஞரிடம் அளிக்க வேண்டும் என்றும், இவ்வழக்கில் நீதிமன்றம் அடுத்து எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், அவர் தனது கருத்தை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.