1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (21:39 IST)

நீதிமன்ற அவமதிப்பு - விஜய் மல்லையாவுக்கு நோட்டிஸ்

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ள ‘மதுபான ஆலை முதலாளி’ விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
 
இவற்றில் ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மல்லையா மீது, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, அவருக்கு மார்ச் 18, ஏப்ரல் 2, 9 என மூன்று முறை வாய்ப்பு அளித்தது. ஆனால் கடைசிவரை அவர் ஆஜராகவில்லை.
 
இதற்கிடையில், விஜய் மல்லையா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்து விவரங்களை, கடன் கொடுத்த வங்கிகளிடம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 
ஆனால், விஜய் மல்லையா தனது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் முழுமையாக தெரிவிக்கவில்லை.
 
இதனால், நீதிமன்ற அவமதிப்பு செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழு கடந்த 18ஆம் தேதி மனு செய்திருந்தது.
 
இம்மனு‌வின் அடிப்படையில் நீதிபதிகள் குரியன் ஜோஸஃப், ரோஹிந்தன் நரிமன் அடங்கிய அமர்வு மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.