1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (14:49 IST)

6000 கன அடி நீர் ; 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றம் அதிரடி

6000 கன அடி நீர் ; 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றம் அதிரடி

இன்னும் 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
காவிரி நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. நேற்று டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 
 
இந்நிலையில், நேற்று நடந்த இருமாநில பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது, வருகிற அக்டோபர் 4ம் தேதிக்குள் அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
மேலும், நாளை மாலைக்குள் நிபுணர்களின் பட்டியலை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு 6000 கன அடி நீரை, கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது. 
 
ஆனால், கர்நாடக அரசு அதை மதிக்காமல், தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதில் கோபமடைந்த உச்ச நீதிமன்றம் இன்னும் 3 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும், இன்று முதல் வருகிற அக்டோபர் 6ம் தேதி வரை, தமிழகத்திற்கு விநாடிக்கு 6000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விடவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு  கர்நாடக அரசுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.