வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (20:49 IST)

இந்தியாவில் முதல் முறையாக எச்ஐவி பாதிப்பை கண்டறிந்த டாக்டர் காலமானார்

இந்தியாவில் முதல் முறையாக எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்த டாக்டர் சுனிதி சாலமன் சென்னையில் காலமானார்.
 

 
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்த டாக்டர் சுனிதி சாலமன் உடல்நலக் குறைவால் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் நேற்று காலமானார். இவரது கணவர் டாக்டர் விக்டர் சாலமன் இறந்துவிட்டார். மகன் டாக்டர் சுனில் சுஹாஸ் சாலமன்.
 
சென்னை அரசு பொது மருத்துவமனை - சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் சுனிதி சாலமன் எச்ஐவி குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். கடந்த 1986 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலியல் தொழில் செய்யும் 6 பெண்களுக்கு எச்ஐவி வைரஸ் தொற்று இருப்பதை டாக்டர் சுனிதி சாலமன் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் மங்களா கூறியதாவது:-
 
வெளி நாடுகளில் மட்டுமே எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கருதி வந்த காலத்தில், தமிழகத்தில் எச்ஐவி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அறிவித்தார் டாக்டர் சுனிதி சாலமன். இதனால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்தியாவில் எச்ஐவியை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்து வந்தார். எச்ஐவியை கண்டுபிடிக்க தனியாக பரிசோதனை மையம், சிகிச்சை மையம் போன்றவற்றை கொண்டு வந்தார். அதன் பிறகு விருப்ப ஓய்வில் சென்ற அவர் எச்ஐவி, எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆலோசனை, பரிசோதனைக்கான ஒய்ஆர்ஜி கேர் தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். டாக்டர் சுனிதி சாலமன் முயற்சியால்தான், தற்போது இந்தியாவில் எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.