உச்ச நீதிமன்ற தீர்ப்பு : அவசரமாக கூடும் அமைச்சரவை : ஆட்சியை துறப்பாரா சித்தராமய்யா?
உச்ச நீதிமன்ற தீர்ப்பு : அவசரமாக கூடும் அமைச்சரவை : ஆட்சியை துறப்பாரா சித்தராமய்யா?
இன்னும் 4 வாரத்திற்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காவேரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக, நீதிமன்றத்தில் இரண்டு முறை கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ஏற்காத உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடும்படி உத்தரவிட்டது. அதனால் வேறுவழியின்று தண்ணீரை திறந்து விட்டது கர்நாடக அரசு.
ஆனால் அதற்கு கர்நாடகாவில் பலத்த எதிப்பு கிளம்பியது. போராட்டங்கள் வெடித்தது. தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். தமிழகத்தை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 50 பேருந்துகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன.
இந்நிலையில், மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது கர்நாடக அரசு. அதன் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றும் கர்நாடக அரசின் வாதத்தை ஏற்காத உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு நாளையிலிருந்து 27ம் தேதி வரை 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முக்கியமாக, இன்னும் 4 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடக அரசுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி நீரை திறந்து விடும் அதிகாரம் கர்நாடகத்திற்கு இல்லாமல் போய்விடும். எனவே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா நாளை அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கூட்டத்தில் தமிழகத்திர்கு தண்ணீரை திறந்துவிட மாட்டோம் என்று முடிவு செய்து விட்டு, சித்தராமய்யா தன் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. ஏனெனில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை அங்கிருக்கும் விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. இதை மீறினால், தற்போதைய அரசு அங்கு செல்வாக்கை இழக்கும்.
மாறாக, ஆட்சியை கலைத்து விட்டால், உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டி வரும். இதனால், கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிர்ப்பு கிளம்பும். மேலும், காவிரி நீருக்காக ஆட்சியையே கலைத்துவிட்டது என்று காங்கிரஸ் அரசு மீது அனுதாபமும் ஏற்படும். அதை வைத்து அரசியல் செய்யலாம் என சித்தராமய்யா முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.