வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 23 அக்டோபர் 2014 (15:37 IST)

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி: சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எந்தக்  கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்த தேர்தலில், பாஜக 122 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குவதால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் அக்கட்சி  தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன் வந்தது. ஆனால் அதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.
 
இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது என சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சியின் மூத்த தலைவர்களான அனில் தேசாய், சுபாஷ் தேசாய் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
 
அவர்கள், பாஜக தலைவர்கள் தர்மேந்திர பிரதான், சந்திரகாந்த் பட்டீல் ஆகியோரை சந்தித்துப் பேசினர். அப்போது பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சிவசேனாவுக்கு அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அமைச்சர் பதவி வழங்கவும், துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை இரு கட்சிகளும் ஏற்றுக் கொண்டதாகவும், அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 25 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் கூட்டணி ஆட்சி உறுதிப்படுத்தப்படும் என தவல்கள் வெளியாகியுள்ளன.