1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (15:17 IST)

பாஜக எதிர்ப்பை மீறி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு: சிவசேனா வெற்றி!

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. 
 
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து அமைத்துள்ள வளர்ச்சிக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றுள்ளார். 
 
அக்டோபர் 24 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானாலும், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் நடந்த அரசியல் மோதல், பிறகு பாஜக திடீர் பதவியேற்பு, பதவி விலகல் ஆகிய பரபரப்புகளால், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைய ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. 
 
இந்நிலையில், வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை கூடும் மகாராஷ்டிரா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே என செய்தி வெளியாகியது. 
 
அதன்படி இன்று கூடிய மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜகவின் ஃபட்னாவிஸ் கோரிக்கையை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பும் செய்தனர். 
 
இருப்பினும் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே அரசுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உட்பட 169 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில் 169 பேர் அரசு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.