வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (07:52 IST)

நீதிமன்றத்தில் ஆஜரானார் நித்யானந்தா

பாலியல் வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார் நித்யானந்தா, வழக்கு விசாரணை ஆகஸ்ட்டு 23 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவர் மீது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் புகாரின் பேரில் பிடதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த ராமநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கர்நாடக நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 16 ஆம் தேதி தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம், ஜூலை 28 ஆம் தேதி ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டது.

ஆனால் நித்யானந்தா ராமநகர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து ராமநகர் மாவட்ட செசன்சு நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த 6 ஆம் தேதி ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்றும், 7 ஆம் தேதி ராமநகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன் பேரில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஆகஸ்ட்டு 18 ஆம் தேதி ராமநகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா நேரில் ஆஜரானார். அவருடன் சீடர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட்டு 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நித்யானந்தா ஆஜரானதையொட்டி ராமநகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.